இந்த 21ஆம் நூற்றாண்டில் மானுட சமுதாயம் பல துறைகளிலும் எண்ணற்ற வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் இத்தகைய அளப்பரிய வளர்ச்சிகளுக்கும் ஆதாரமான வளர்ச்சி, நாகரீகத்தின் முதல் வளர்ச்சி - ஆதிமனிதனின் முதல் முயற்ச்சி, மொழியின் ஆரம்பம்தான் என்றால் அது மிகையாகாது. மக்களை மாக்களிநின்று வேறுபடுத்துவது மொழியே. நமது பாரதத் துணைக் கண்டத்தில் 179 மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. ஆனால் இவற்றுள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 16 மட்டுமே. நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்த துணைக்கண்ட மக்களை ஒருமுகப்படுத்தவும், ஒருமைப்பாட்டுணர்வைப் பேணவும் ஒரு தேசிய மொழி அவசியமாகிறது. அதுதான் ஹிந்தி.
இந்திய தேசத்தின் அடிப்படை சித்தாந்தம் - ஜனநாயகம். அதாவது பெரும்பான்மையோர் விரும்புகிற அரசாங்கம்தான் நடக்கும். இதே அடிப்படையில் பெரும்பான்மையினரால் (75%க்கும் அதிகமான மக்களால்) பேசப்படும் மொழியான ஹிந்தி மொழியை தேசிய மொழியாக அறிவித்துள்ளது நமது இந்திய அரசு. ஆனால் நம் தமிழகத்தை சேர்ந்த சில அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளாமல் இன்னமும் எதிர்த்து வருகின்றனர். ஒரு விஷயத்தை நாம் எல்லோரும் புரிந்துகொள்ள, ஒத்துக்கொள்ள வேண்டும். அதாவது, மொழி என்பது ஓர் ஊடகம். ஒரு மனிதனின் கருத்துக்களை, சிந்தனையை இன்னொருவரிடம் பகிர்ந்துகொள்ள உதவும் ஒரு கருவி மொழி. உதாரணமாக நமது பிரதமரோ அல்லது குடியரசுத் தலைவரோ நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதானால் எந்த மொழியில் உரையாற்ற வேண்டும்? எந்த மொழியில் உரையாற்றினால் அதிகப்படியான மக்களை சென்றடையுமோ அந்த மொழியில்தானே உரையாற்ற வேண்டும்? அதுதானே நியாயம்? அதன்படி பார்த்தால் ஹிந்தியைத்தானே தேர்ந்தெடுக்கவேண்டும்?
பெரும்பான்மையோரின் வாக்குகளைப் பெறும் கட்சிதானே ஆட்சி அமைக்கிறது? ஆனால் அந்தக் கட்சிக்கு வாக்களிக்காதவர்களும், பெரும்பான்மையோரின் தீர்ப்புக்கு தலை வணங்கி, அமையும் அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்? அதுதானே ஜனநாயகத்தின் நியதி? ஆட்சியை பெரும்பான்மை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளும் நாம் ஆட்சி மொழியை மட்டும் ஏன் அதே அடிப்படையில் ஏற்றுக் கொள்வதில்லை? ஏன் இந்த முரண்பாடு? இதில் இன்னும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஹிந்தியை எதிர்ப்பவர்கள் எல்லோரும் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வதும் ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைத்துக் கொண்டிருப்பதும் தான். நமது நாட்டை அடிமைப்படுத்த ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய ஆயுதம், ஆங்கிலமும் அதன்பால் நம் மக்கள் கொண்டிருந்த மோகமும். 1835 ஆம் ஆண்டு லார்டு மெக்காலே என்பவர் இந்தியாவை அடிமைப்படுத்த, இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு அளித்த பரிந்துரையின் பேரில் நம்மீது திணிக்கப்பட்டது ஆங்கிலக்கல்வி. நம் நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப் பட்டுக் கிடந்ததை இன்னமும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் ஒரு வேதனையான நினைவுச்சின்னம்தான் ஆங்கிலம்.
ஒருவேளை ஆங்கிலேயர்களுக்குப் பதில் சீனர்களோ அல்லது ஜெர்மானியர்களோ நம் நாட்டை அடிமைப்படுத்தியிருந்தால் இன்று ஆங்கிலத்துக்கு பதில் அந்த இடத்தில் சீன மொழியோ அல்லது ஜெர்மானிய மொழியோ தான் இருந்திருக்கும் என்பது எவ்வளவு கசப்பான உண்மை? ஜப்பான் நம்மைவிட பலதுறைகளிலும் வளர்ச்சி கண்ட நாடு என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அவர்களின் ஆட்சிமொழி, தேசியமொழி எல்லாமே ஜப்பானிய மொழி தான். அவர்கள் அதே மொழியில்தான் மருத்துவம், பொறியியல் போன்ற அனைத்துப் பாடங்களையும் படிக்கின்றார்கள். அதனால் அவர்களும் வளர்ந்திருக்கிறார்கள், அவர்களுடைய மொழியும் வளர்ந்திருக்கிறது. ஆனால் நாம் ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்வதிலேயே இன்னமும் நமக்குள் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் தேசப்பற்று என்பதே இந்தியாவுக்கு எதிரான போக்குதான். தமிழர்களாகிய நமக்கு தமிழ்பற்று என்றால் ஹிந்தியை எதிர்ப்பது அல்ல. பிறகு நமக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் வித்தியாசம் என்ன இருக்கிறது? ஹிந்தியை எதிர்ப்பவர்கள் தயவு செய்து இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். நான் ஒன்றும் என் தாய் தமிழுக்கு எதிரானவன் அல்ல. தமிழை நேசிப்பவர்கள், தமிழ் வளர பாடுபட நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? தங்கள் குழந்தைகளுக்கு அழகுத்தமிழில் பெயர் வைக்கலாம். ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் பேசும்போது, கூடுமானவரை பிற மொழிக் கலப்பு இன்றி அழகுத் தமிழில் பேசலாம். தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் கூடுமானவரை பிற மொழிக் கலப்பு இன்றி அழகுத் தமிழில் பேசலாம். அறிவியல், கணிதம், மருத்துவம், கணினி போன்ற துறைகளுக்கான கலைச் சொற்களை உருவாக்கலாம். பிற மொழிகளில் உள்ள நல்ல இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்க்கலாம். தமிழை நேசிக்கவும் தமிழுக்காகப் பாடுபடவும், இன்னும் இப்படி எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. நான் கையொப்பமிடுவது கூட தமிழில்தான். ஆனால் ஹிந்தியை எதிர்ப்பது என்பது எந்த வகையிலும் தமிழ்ப் பற்று ஆகவோ, அல்லது தமிழை வளர்க்கும் முயற்ச்சியாகவோ ஆகாது.
ஜப்பானியர்களின் தேசிய மொழி ஜப்பானிய மொழி, ஜெர்மானியர்களின் தேசிய மொழி ஜெர்மன், பிரான்சின் தேசிய மொழி பிரெஞ்சு, சீனர்களின் தேசிய மொழி சீன மொழி. ஆனால் இந்தியாவின் தேசிய மொழி? ஹிந்திதான் நமது தேசிய மொழி என்று நம் நாட்டில் உள்ள எல்லா மாநில மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டாமா? இது வெறும் சாதாரண மொழிப்பிரச்சினை இல்லை. இது தேசத்தின் ஒருமைப்பாடு சம்மந்தப்பட்ட பிரச்சினை! இந்திய தேசத்தின் சிறப்பம்சமே "வேற்றுமையில் ஒற்றுமை" என்பதுதான். ஒவ்வொரு மாநில மக்களுக்கும் வெவ்வேறு விதமான கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள் உள்ளன. ஆனால் நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வு மூவண்ணக்கொடியைப் பார்த்தவுடன் நம் ஒவ்வொருவருடைய மனதிலும் தோன்றுகிறதல்லவா? அதேபோல் நமது தேசியப்பறவை மயில், தேசிய விலங்கு புலி, தேசிய மலர் தாமரை, தேசிய கீதம் ஜன-கண-மண என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லையே! ஆனால் தேசிய மொழியில் மட்டும் ஏன் முரண்பாடு? ஒவ்வொரு மாநிலத்தவர்க்கும் தாய் மொழி என்று ஒன்று உண்டு. ஆனால் தேசிய மொழி என்பது எல்லா மாநிலத்தவர்க்கும் பொதுவான ஒன்றாக, அது ஹிந்திதான் என்று எல்லோருமே ஏற்றுக் கொண்டால்தானே "வேற்றுமையில் ஒற்றுமை" என்னும் வாசகம் கூட முழுமையடையும்? தேசத்தந்தை மகாத்மா கூட, "இந்தியர் அனைவரையும் ஒருமுகப்படுத்தி ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் சக்தி ஹிந்திக்கு மட்டுமே உள்ளது" என்று கூறி இருக்கிறார். ஆனால் அவருடைய தாய்மொழி குஜராத்தி. எனவே ஹிந்தியை ஒரு எதிரி மொழியாக நினைப்பதை விட்டுவிட்டு, இந்தியர்களின் ஒருமைப் பாட்டையும் தேச பக்தியையும் பேணிப்பாதுகாக்கும் ஒரு சக்தியாக, நம் தேசிய மொழியாக நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியனும் தேசிய மொழியையும் நேசிக்க வேண்டும்.
- வாழ்க பாரதம்! வாழ்க தேசிய ஒருமைப்பாடு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக